வேளாண் துறை சார்பில் தொழில் முனைவோர்களுக்கான இடைமுக பயிற்சி பட்டறைகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர்களுக்கான இடைமுக பயிற்சி பட்டறை நடந்து வருகிறது. இதில் நுகர்வோருக்கு ஏற்ற உணவு உற்பத்தி, தொழில் முனைவோருக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், விவசாய விளை பொருட்களை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் மூலம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது குறித்தும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சியில் அரசின் பங்கு குறித்தும், பொருட்கள் சந்தை படுத்துதல் குறித்தும் விவசாய தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளுக்கு பலன் தரும் திட்டங்கள் குறித்து இடைமுக பயிற்சி பட்டறையில் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், வேளாண் துணை இயக்குனர் காளிமுத்து, வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லம், தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Agriculture
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த்தால் விளை நிலங்களில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த்தால் விளை நிலங்களில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான புலியூர், அரசம்பட்டி, அகரம், செல்லம்பட்டி, நாகரசம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது காய்த்து குலுங்குகின்றன. இதனால் புலியூர் தக்காளி மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.15க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் வரத்து அதிகரிப்பால் விலை படிப்படியாக குறைந்து இன்று ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனையாகிறது. விலை சரிவால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதுகுறித்து வண்டிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், “வரத்து அதிகரிப்பால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காலி ரூ.5-க்கு வாங்கி, வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர். பறிக்கும் கூலிக்கு கூட பணம் கிடைக்காத காரணத்தால் நிலங்களிலேயே பறிக்காமல் விட்டுள்ளோம் என தெரிவித்தார்.
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் மழைக்கு சாய்ந்த நெற்பயிற்கள்-அதிகபடியான தண்ணீர் தேங்குவதால் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்ஆவல்நாயக்கம்பட்டி ஜம்புகுட்டப்பட்டி பாரூர், வாடமங்கலம், என்.தட்டக்கல், வேலம்பட்டி பாரூர் கீழ்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 50ற்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள நெற்பயிற்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். மேலும் பல ஏக்கரில் அதிகப்படியான தண்ணீர் தேங்குவதால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நீரில் நெற்கதிற்கள் மூழ்கி இருப்பதால், மீண்டும் முளைக்கத்துவங்கியுள்ளன. வருவாய் இழப்பை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.
சூளகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .
தென்னையில் பூச்சி நோய் விழிப்புணர்வு முகாம் சூளகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் காணப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிடத்தக்க அளவு மகசூல் இழப்பும் ஏற்படவாய்ப்புள்ளது. குறிப்பாக கருந்தழைப்புழு ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டா மிருக வண்டு போன்ற பூச்சிகளும் கேரளா வேர் வாடல் நோய் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் சூளகிரி வட்டாரத்திற்குட்பட்ட மாரண்டபள்ளி, பாத்தகோட்டா, காமன்தொட்டி, ஆழியாலம் ஆகிய கிராமங்களில் கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து அதை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும் மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள்( நீளம் 3 அடி, அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்கிற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் தங்கவைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் ஒட்டுண்ணிகள் பிராக்கான் பிரிவிகார்னிஸ் 1800 எண்கள்/ ஏக்கர் வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்று விளக்கி கூறினார். இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர்,முனைவர் ஸ்ரீ திவ்யா இணை பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன் பால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிஞர் அண்ணா கல்லூரியின் ஆங்கிலத்துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை ( 28 .03 2023) அன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் S.பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் பல்வேறு படைப்பாளுமை திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் தகவல் தொடர்பு மொழியாக ஆங்கிலம் பயன்படுவதால் அதனை சரளமாக அனைத்து மாணவ மாணவியர்களும் பேசுதல் வேண்டும். நாள்தோறும் ஆங்கில நாளிதழ்களை வாசித்தல் வேண்டும் என்று பேசினார். கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஜென் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவி , இணை பேராசிரியை முனைவர் R. பாத்திமா ராய் கலந்து Recent Trends in English language Teaching and learning என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில், மாணவ மாணவியர்கள் நாள்தோறும் ஆங்கில க் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடத்தில் உள்ள கருத்துக்களை வாழ்க்கையில் எடுத்து முன்னேற்றம் காண வேண்டும். பல்வேறு கருத்தரங்களில் பங்கு பெற வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். கருத்தரங்கத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆங்கிலத் துறை ஆராய்ச்சி மாணவ மாணவிகள் பங்குபெற்று சிறப்பித்தனர். கருத்தரங்கத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியர்களான திரு மாட்டின் பால்ராஜ் , திரு புஷ்பராஜ் , திரு மணி, முனைவர் லெமன்சினோ, திருமதி கலைவாணி திருமதி இந்திரா, திருமதி சுமதி, திருமதி பிரியா ,திருமதி சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கின் நிறைவாக கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் சரவணகுமார் நன்றி கூற, கருத்தரங்கம் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் ஆகியோர் இன்று (01.08.2022) திறந்து வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 01.08.2022 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கர் என மொத்தம் 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன.
இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள, தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி மற்றும் மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 ஊராட்சிகளில் உள்ள 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 120 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும் அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும் 8 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் (வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு:26 க.அடி/வினாடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு:62 க.அடி/வினாடி) என மொத்தம் BB கன அடி / வினாடி வீதம் திறந்து விடப்படும்.
அணையின் மொத்த நீர்மட்டம் 44.28 அடி, அணையின் முழு கொள்ளளவு 481 மி.க.அடி, அணையின் இன்றைய நீர்மட்டம் (01.08.2022) 42.15 அடி, அணையின் இன்றைய கொள்ளளவு 400.87 மி.க.அடி ஆகும்.
எனவே, விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தேன்மொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) திரு.குமார், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ஆனந்தய்யா, உதவி செயற்பொறியாளர் திரு.உதயகுமார், உதவி பொறியாளர்கள் திரு.பொன்னிவளவன், திருமதி.ராதிகா, வட்டாட்சியர் திரு.கவாஸ்கர், மாநகராட்சி கவுன்சிலர் திரு.சீனிவாசன், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சாந்தாவீரபத்திரப்பா, விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் 10,000 பனை விதை நடும் திருவிழாவை அகரம் விவசாய குழு துவக்கினர்
அகரம் கிராமத்தில் 10,000 பனை விதை நடும் திருவிழாவை அகரம் விவசாய குழு துவக்கினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் அகரம் விவசாய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விவசாய குழுவில் அகரம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாய இளைஞர்கள் உள்ளனர். அகரம் விவசாய குழு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதுடன் அழிந்து வரும் பனை மரத்தை பாதுகாக்க 10,000 பனை விதைகளை தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் விதைக்கும் திருவிழாவை துவக்கியுள்ளனர். அகரம் கிராமத்தை சுற்றியுள்ள தெண்பெண்ணை ஆற்றங்கரை படுகையின் ஓரத்தில் பனை விதைகளை குழுவினர் விதைத்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1000 பனை விதைகள் என 10 நாட்களில் 10,000 பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அகரம் விவசாய குழுவின் செயலாளர் பெரியண்ணன் அவர்களிடம் கேட்டபோது, பனை மரத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும், பனை சார்ந்த தொழிலாளர்கள் தொடர் நட்டம் காரணமாக பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று விட்ட காரணத்தாலும், செங்கல் சூளைகளுக்கு மரம் வெட்டப்பட்டதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70 சதவீத பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் சீரிய முயற்சியால் பனை மரங்களை வெட்ட தடை செய்யப்பட்டபோதும் தொடர்ந்து சில சமூக விரோதிகளால் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அழிந்து வரும் பனை மரங்களை காக்க பனை விதை நடும் திருவிழாவை துவக்கியுள்ளோம். முதற்கட்டமாக தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் நடப்படும் பனை விதையால மண் அரிப்பு தடுக்கப்படும் என்பதால் 10,000 பனை விதைகளை அகரம் தெண்பெண்ணை ஆற்றங்கரையோரம் நடுகிறோம் என தெரிவித்தார்.
ரூ.35 கோடியே 64 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை மற்றும் நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.35 கோடியே 64 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் வேப்பனஹள்ளி, பர்கூர் மற்றும் தளி ஊராட்சி ஒன்றியங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் விதமாக இயற்கை வள மேம்பாட்டு பணிகளான கசிவு நீர் குட்டை, பண்ணை குட்டை, தடுப்பணை மற்றும் நீர் செறிவூட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தின் மூலம் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 16 ஆயிரத்து 203 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறவுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பொம்மரசனப்பள்ளி, அரியனப்பள்ளி, நாச்சிகுப்பம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் நீர்வடிப்பகுதி திட்டத்தின் மூலம் மழைநீர் சேமிப்பு கசிவு நீர் குட்டைகள், கதிர்அடிக்கும் களம் மற்றும் பைப்லைனுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.7.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நீர் செறிவூட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.7.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகவல்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் உற்பத்தி பெருக்கவும், நிலத்தடி நீர் செறிவூட்டம் பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் அதனப்படையில், தமிழ்நாடு அரசு மற்றும் பிரதான் மந்திரி விவசாய நீர் பாசன திட்டத்தின் கீழ் நீர் வடி பகுதி மேம்பாட்டு திட்டம் 2.0 நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, பர்கூர் மற்றும் தளி ஆகிய மூன்று வட்டாரங்களில் இயற்கை வள ஆதார மேம்பாட்டு பணிகள், பண்ணை உற்பத்தி பணிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மழைநீர் சேமிப்பு கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள், பண்ணைகுட்டைகள், நீர் அமிழ்வு குட்டைகள், கம்பி வலை தடுப்பணைகள், நீர் உறிஞ்சு குழிகள், வறண்ட கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் செறிவூட்டும் பணிகள், பழசெடிகள் நடவு மற்றும் சமூக காடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவசாய குழுக்கள், மகளிர் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயதொழில் மேற்கொள்ள சூழல் நிதி வழங்கப்படுகிறது.
வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாடுவனப்பள்ளி, வேப்பனஹள்ளி,நாச்சிகுப்பம், தம்மாண்ரப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, மணவாரனப்பள்ளி, சென்னசந்திரம்ஆகிய ஊராட்சிகளில் தொடர்ந்து 5 ஆண்டு திட்ட பணியாக 17 நீர் வடி பகுதி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 2021- 2022 முதல் ஆண்டு நுழைவு கட்டபணியாக ரூ. 25 இலட்சம் மதிப்பிட்டில் 9 கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணிகளும், ரூ.25.40 இலட்சம் மதிப்பீட்டில் 10 கதிர் அடிக்கும் களம், மற்றும் 7 – குடிநீர் பைப்லைனுடன் கூடிய சிறு தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பர்கூர் ஒன்றியத்தில் கொட்டப்பநாயனப்பள்ளி, குள்ளம்பட்டி, பட்லப்பள்ளி, பெருகோப்பனப்பள்ளி, தொகரப்பள்ளி, கண்ணடஹள்ளி, ஜெகதேவி, வெப்பாலம்பட்டி, ஐ.கொத்தப்பள்ளி, ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 12 நீர் வடிபகுதி திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளது. 2021- 2022 முதல் ஆண்டு நுழைவு கட்டபணியாக ரூ.24 இலட்சம் மதிப்பில் 8 கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணிகளும், ரூ.24.29 இலட்சம் மதிப்பில் 12 கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தளி ஒன்றியத்தில் ஜவளகிரி, மாடக்கல், தக்கட்டி, உரிகம் மற்றும் கோட்டையூர் ஆகிய ஊராட்சிகளில் 23 நீர் வடிப்பகுதி திட்ட பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. 2021 2022 முதல் ஆண்டு நுழைவு கட்டபணியாக ரூ. 24 இலட்சம் மதிப்பில் 8 கசிவு நீர் குட்டைகள் அமைக்கும் பணிகளும், ரூ. 21.59 இலட்சம் மதிப்பில் 23 குடிநீர் பைப்லைனுடன் கூடிய தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 16 ஆயிரத்து 203 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும் பண்ணை உற்பத்தி பணிதிட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 105 ஹெக்டர் தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் பழசெடிகள் மற்றும் சமூக காடுகள் வளர்ப்பு பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மண்புழு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, கோழி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு, சிறுதொழில்களான சோப்பு, ஊதுவத்தி, அப்பளம் மற்றும் சேம்பு தயாரிக்கும் பணிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இன்று வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் பொம்மரசனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் ரூ. 5 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கசிவு நீர் குட்டை, ரூ. 3 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கசிவு நீர் குட்டை பணிகளும் அரியனப்பள்ளி நீர்வடிப்பகுதியில் ரூ. 2.89 இலட்த்தில் கதிர் அடிக்கும் களம் பணிகளும், கடவரப்பள்ளி நீர் வடிப்பகுதியில் ரூ. 69 ஆயிரம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து மழை நீரை சேமிக்க வழிவகை
செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இவ்வாய்வின்போது வேளாண்மைத் துறை துணை இயக்குநர் திரு.சிவசங்கர் சிங், வேளாண் உதவி இயக்குநர் திருமதி.கே.சரோஜா, நீர்வடிப்பகுதி அணி பொறியாளர் திரு.வி.சரவணன், நீர் வடிப்பகுதி (வேளாண்மை) திருமதி.எம்.தமிழரசி, வேப்பனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திரு.கலீல், நாச்சிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.என். இந்திராநாகராஜ் மற்றும் நீர் வடிப்பகுதி குழு உறுப்பினர்கள், பயனாளிகள் குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மாங்கனி கண்காட்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சத்தீஸ்குமார் நாய் கண்காட்சியை துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் கால்நடைபராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.சத்தீஸ்குமார் அவர்கள் இன்று (10.7.2022) துவக்கி வைத்து தேர்வு பெற்ற செல்லபிராணிகளின் உரிமையாளர்களுக்கு பாராட்டு சான்றிதல் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்களது நாய்களை கண்காட்சியில் இடம்பெற வைத்திருந்தனர் நாய்களின் உடல் ஆரோக்கியம், கீழ்ப்படியும் திறன், தோற்றம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு வகையிலான நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சியில் வெளிநாட்டு ரகங்களான பீகில், ராட்வீலர், கோல்டன் ரெட்ரீவர், டாபர்மேன், லேபர் டார்,ஜெர்மென் சப்பர்டு,சைபீரியன் ஹஸ்கி,போன்ற நாய்களும் உள்நாட்டு ரகங்களான கோம்பை, சிப்பி பாறை, ராஜபாளையம்,கண்ணி போன்ற நாய்களும் போட்டிகளில் இடம்பெற்றன இதில் பல்வேறு வகையிலான நாய்கள் பரிசுகளை தட்டி சென்றது.மேலும் காவல்துறையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டிய நாய்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது