Home » காணத்தக்க கிருஷ்ணகிரி திட்டத்தின் கீழ் மல்லசந்திரம் புராதன சின்னங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் விழிப்புணர்வு குழுவினர் பார்வையிட்டனர்.

காணத்தக்க கிருஷ்ணகிரி திட்டத்தின் கீழ் மல்லசந்திரம் புராதன சின்னங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் விழிப்புணர்வு குழுவினர் பார்வையிட்டனர்.

by Poovizhi R
0 comment

காணத்தக்க கிருஷ்ணகிரி திட்டத்தின் கீழ் மல்லசந்திரம் புராதன சின்னங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ,ப. அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு குழுவினர் இன்று (29.4.2023) காலையில் பார்வையிட்டனர்.தமிழகத்தில் ஒரே இடத்தில் அதிக கல்திட்டைகள் உள்ள இடம் நமது மல்லசந்திரம் என்பது பெருமைக்கு உரியதாகும், இக்கல்திட்டைகள் சிலவற்றில் வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன.”காணத்தக்க கிருஷ்ணகிரி” விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை (Awareness Tourism) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் இன்று ( 29.04.2023) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் நிகழ்வாக காலை 6.30 மணிக்கு மல்லசந்திரம் புராதன சின்னங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் நேரில் பார்வையிட்டனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக தொல்லியல் எச்சங்களைக்கொண்ட மாவட்டங்களில் முதன்மையானது கிருஷ்ணகிரி மாவட்டமாகும். புதிய கற்காலம் தொடங்கி தற்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றினை நம்மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மக்கள் இரும்பை பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதை மயிலாடும்பாறை அகழாய்வு வெளிப்படுத்தியது. இரும்புக்காலத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவது இம் மக்கள் இறந்தோரின் நினைவாக எழுப்பியுள்ள பெருங்கற்படைச் சின்னங்கலாகும். இச்சின்னங்களில் முதன்மையாது கற்திட்டைகளாகும். நூற்றுக்கு மேற்பட்ட இத்தகைய கல்திட்டைகளைக் கொண்ட இடம் தான் மல்லசந்திரத்தின் மோரல் பாறையாகும்.மூன்று அல்லது நான்கு பக்கமும் நிறுத்தப்பட்ட பலகைக் கற்களின் மீது ஒரு மூடுகல்லை வைத்து வீடுபோல் உருவாக்கப்படுவதே கல்திட்டையாகும். இக்கல்திட்டையை சுற்றி கற்கள் நடப்பட்டு இடையில் கற்களை அடுக்கிய கட்டுமானம் காணப்படுகிறது. நடுவே பெரிய கல் திட்டையும், சுற்றிலும் சிறிய கல் திட்டைகளும் இருப்பதை கொண்டுபார்க்கும் போது நடுவில் உள்ளது முக்கிய தலைவனுக்கானது போலவும், சுற்றியுள்ளது அவனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கானது போல் உள்ளது. இக்கல் திட்டைகளின் வடிவமைப்பானது பின்னால் எழுந்த கோயில்களுக்கு அடித்தளமாய் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கல்திட்டைகள் சிலவற்றில் வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன. பிற்கால நடுகற்களின் முன்னோடிகளாக இவ்வோவியங்கள் கருத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒரே இடத்தில் அதிக கல்திட்டைகள் உள்ள இடம் நமது மல்லசந்திரம் என்பது பெருமை குறியதாகும். அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் ”காணத்தக்க கிருஷ்ணகிரி” என்ற விழிப்புணர்வுச் சுற்றுலா (Awareness Tourism)த் திட்டத்தை தொடங்கியுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

அடுத்த பயணமாக வரும் சனிக்கிழமையன்று (06.05.2023) ஐகுந்தம் அருகிலுள்ள மயிலாடும்பாறையை குழு பார்வையிட உள்ளது. இப்பயணத்தில் வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இப்பயணத்தின் போது கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி), திருமதி. வந்தனா கார்க் இ.ஆ.ப., ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் த.சினேகா இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரண்யா இ.ஆ.ப. மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயனி இ.வ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.தாட்சாயினி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், திரு.கோவிந்தராஜ், சுற்றுலா அலுவலர் திரு.ஆர்.ஜே. கஜேந்திரகுமார், வட்டாட்சியர்கள் திருமதி.பன்னீர்செல்வி, திரு.விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.விமல்ரவிகுமார், திரு.கோபாலகிருஷ்ணன், வரலாற்று ஆய்வாளர் திரு.அறம்கிருஷ்ணன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், வரலாற்று ஆவணக் குழுவினர், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!