Home » குந்தாரப்பள்ளி பகுதியில் புதிய வழி தடத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ரூ.68 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

குந்தாரப்பள்ளி பகுதியில் புதிய வழி தடத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ரூ.68 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

குந்தாரப்பள்ளி பகுதியில் புதிய வழி தடத்தில் இரண்டு பேருந்துகள் மற்றும் ரூ.68 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு-ஆர்.காந்தி அவர்கள் 27-4-2023 அன்று துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி பகுதியில் புதிய வழி தடத்தில் இரண்டு பேருந்துகள், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்வணகுப்பம், சிகரமாகனப்பள்ளி, சென்னசந்திரம் ஊராட்சிகளில் ரூ.68 கோடியே 50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 ஊராட்சி மன்ற ஆகிய அலுவலக கட்டிடங்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு-ஆர்.காந்தி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு-ஒய்.பிரகாஷ் (ஓசூர்), திரு.தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில் (27.04.2023) அன்று துவக்கி வைத்தார்.மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், குறிப்பாக சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய்கள், பேருந்து வசதி, பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், புதிய முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் 06.04.2023 அன்று நடைபெற்ற 2023-24 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக புதிதாக 9 மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார்கள்.அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சியில் கே.எச்.01 பெட்டமுகிலாளம் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம் துவங்கப்பட உள்ளது. இச்சங்கம் பெட்டமுகிலாளம் ஊராட்சி மற்றும் தொட்டமஞ்சு ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கியது. தொட்டமஞ்சு ஊராட்சியில் உள்ள 42 குக்கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர், பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள 47 குக்கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் கடன்கள் மற்றும் உரங்கள் பெற 35 கி.மீ தொலைவில் உள்ள எஸ்.8986 அஞ்செட்டி மற்றும் கே.கே.217 கெத்தஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.எனவே இவர்கள் பயன்பெறும் வகையில் பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள 2318 மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர், தொட்டமஞ்சு ஊராட்சியில் உள்ள 1165 மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் கே.எச்.01 பெட்டமுகிலாளம் மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டுள்ளது.இச்சங்கத்தின் மூலம் பழங்குடியின் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மலைவாழ் மக்களுக்கு சிறுவனப் பொருள்கள் சேகரிப்பு மற்றும் விற்பனை, பயிர்க்கடன் வழங்குதல், கால்நடை பராமரிப்பு கடன் வழங்குதல், நகைக்கடன் வழங்குதல், சுயஉதவிக் குழுக்கடன் வழங்குதல், நுகர்வோர் கடன் வழங்குதல், வேளாண் இடுபொருள் விநியோகம், வேளாண் விளைபொருள் விற்பனை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லவும், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி வேலை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு பயணம் செய்யவும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை சரியான நேரத்திற்கு சந்தைக்கு விற்பனை செய்ய பேருந்தில் எளிதாக கொண்டு செல்ல ஏதுவாக கிருஷ்ணகிரி நகர பேருந்து கிளையில் இயங்கி வரும் தடம் எண் கே.48 இதுவரை கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் விருப்பச்சந்திரம் வரை சென்று வந்த நகரப்பேருந்து தற்போது ஆவகானப்பள்ளி கிராமத்திற்கு காலை 1 நடையும், மாலை 1 நடையும் வழிநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரியிலிருந்து தடம் எண் கே.69 நகர பேருந்து இதுவரை பண்ணந்தூர் வரை சென்று வந்த நிலையில் தற்போது அரசம்பட்டி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-2022 -ன் கீழ் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்லாகுப்பம் ஊராட்சியில் ரூ.22 இலட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலும், சிகரமாகனப்பள்ளி ஊராட்சியில் ரூ.22 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலும், சென்னசந்திரம் ஊராட்சியில் ரூ.23 இலட்சம் என மொத்தம் ரூ.68 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.வந்தனா கார்க் இ.ஆ.ப., தருமபுரி மண்டல பொது மேலாளர் திரு.எஸ்.ஜீவரத்தினம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகள், ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.சரோஜினி, வட்டாட்சியர் திரு.சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பத்ரிநாத், திரு.சீனிவாச மூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!